Monday, November 12, 2012

ஆன்ம வித்தை: பகுதி-3



ஆன்ம வித்தை
பகுதி-3
சரணம் 3
பதவுரை
தன்னை அறிதல் இன்றிப் பின்னை எது அறிகில் என்?: ‘தான்என்னும் பேருணர்வை அல்லது பரமாத்ம வடிவை அறிந்து கொள்ளாமல் வேறுள்ளவற்றை அறிந்து கொள்வதனால் என்ன பிரயோசனம்?
தன்னை அறிந்திடில் பின் என்னை உளது அறிய? :‘தான் என்னும் தனது உண்மை வடிவை அறிந்து கொண்டபின்னர் அறிவதற்கு வேறென்ன இருக்கிறது?
பின்ன உயிர்களில் அபின்ன விளக்கு எனும்: பலவிதமாகப் பிரிந்து காணும் ஜீவன்களுக்குள், பின்னமில்லாத முழுமையாக, ஒரு விளக்கைப் போன்ற
அத் தன்னை (ன்)னில் உணர: அந்தத் தான் என்னும் சொருபத்தைத் தனக்குள்ளேயே உணர்ந்தால்
மின்னும் (ன்)னுள் ஆன்ம ப்ரகாசமே; அருள் விலாசமே; அக விநாசமே; இன்ப விகாசமே: அது தனக்குள்ளே ஆன்ம ஜோதியாக ஒளிவிடும். அதுவே கருணையின் அடையாளமாகத் திகழும் அந்த ஒளி அஹங்காரத்தை அடியோடு ஒழிக்கும்.
பொருள் விளக்கம்:

இச்சரணத்தின் முதல் இரண்டு அடிகளில், பகவான் ஸ்ரீ ரமணர் ஆன்ம வித்தையை ஏன் நாம் பயில வேண்டும் என்பதற்கான காரணம் உண்மையான அறிவைப் பெற என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அத்தகைய அறிவு எது என்று ஆராய்வோம்.
லௌகிக விஷயங்களில் ஈடுபட்டு வெளியுலகத்தை பற்றிய அறிவை மனிதர்கள் நாடிச் செல்கையில் அடைவது குறுகிய அறிவு. ஏனெனில் அது காலம், இடம், சூழ்நிலை இவற்றால் மாறக்கூடிய தன்மை வாய்ந்தது.

அதற்கு அடுத்தபடியாக,இறைவனைப் பற்றியும் அவனை வழிபடும் முறைகள் பற்றியும் பெரியோர்களிடமிருந்தும், நல்ல நூல்களிலிருந்தும் அறிந்துகொள்கிறோம். இப்படிச் சேகரிக்கப்பட்ட அறிவும், பரிபூரண ஆனந்தத்தைத் தர இயலாத முழுமை இல்லாத அறிவு என்று ரமணர் கூறுகிறார்.

தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்வதே அறிவு என்று கொண்டால், அந்த அறிவைத் தேடும் முயற்சியில் ஈடுபடும் நம்மைப் பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா (தன்னை அறிதல் இன்றிப் பின்னை எது அறிகில் என்?) என்ற அடிப்படையான கேள்வியொன்றைக் கேட்கிறார், தம்மைப் பற்றிய ஞானத்தை முற்றிலும் பெற்றவரான பகவான்.

அப்படித் தெரிந்து கொள்ளாவிடில் நாம் சேகரித்த அறிவு பயனற்றதாக ஆகிவிடும் என்றும் சுட்டுகிறார்.

இதற்கும் ஒருபடி மேலாக,தனது உண்மை வடிவை அறிந்ததன் பின்னர், நம்மால் அறியப் படுவதற்கு வேறு ஒரு பொருளும் இல்லை என்றும் கூறுகிறார்.

ஆத்ம ஞானம் அடைந்த நிலையானது ப்ரம்மம் என்று கூறப்படும் பரம்பொருள் தானாகவே இருப்பதை உணர்ந்த பேரின்ப நிலை.
அதுவே தத் த்வம் அஸி என்ற உபநிஷத் வாக்கியத்தில் குறிக்கப்படும் தத் அல்லது பிரம்மமாகத் தான் ஆன நிலை.
தன்னைத் தவிர வேறொன்றில்லாத அந்நிலையில், அறிபவன், அறியப்படுவது, அறிவு ஆகிய மூன்றும் (ஞாத்ரு, ஞேயம், ஞானம்) மூன்றும் ஒன்றாவதால், மேற்கொண்டு அறிய வேண்டியது என்று ஒன்றும் இல்லாமல் போகிறது.
இதையே செறிவற்று உலகோடு உரை, சிந்தயும் அற்று, அறிவற்று, அறியாமையும் அற்றதுவே என்பார் கந்தர் அனுபூதியில் அருணகிரிநாதப் பெருமான்.
அதனால் தான், தன்னை அறிந்திடில் பின் என்னை உளது அறிய? என்று பகவான் வினவுகிறார்.
(முந்திக் குறிப்பிட்டது போல, முருகனார் இப்பாடலின் அனுபல்லவி வரை எழுதிப் பகவானிடம் காண்பித்த போது அவர், அத்ம ஞானம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியை விட மிகத் தெளிவானது என்ற பொருள்பட அமைந்த இடத்தை முருகனாருக்குச் சுட்டி, கை, கனி போன்ற வெளியே உள்ள பொருளாக இல்லாமல் எல்லாம் தானாகவே உள்ள ஆன்மாவிற்கு வெளியுலகம் சம்பந்தமான எந்த எடுத்துக் காட்டும் பொருந்தாது என்று சுட்டிக் காட்டியதாக ரமணரின் வாழ்க்கைக் குறிப்பிலிருந்து நாம் அறிகிறோம்.
(இதையே அவ்வாறு அறிவார் அறிகின்றது அதனால், எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே?” என்று அருணகிரி நாதர் கந்தர் அனுபூதியில் கூறுவார்.)
இந்தச் சரணத்தில் அவர் சொன்னதன் பொருள் தெளிவாகக் காண்கிறது).
வேதங்களும், உபநிஷத்துக்களும், பகவத் கீதையும் பலவகையில் இந்தக் கருத்தை நமக்குச் சொல்கின்றன என்றாலும், நம்மிடை வாழ்ந்து ஆத்மஞானம் பெற்ற மகரிஷி ஒருவரிடமிருந்து இப்படி நேரடியாகவும், அழுத்தமாகவும் ஆன்ம வித்தையின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் கேட்கும் பொழுது அதன் வலிமை பன்மடங்காகிறது என்பதை இந்த இரண்டு அடிகள் வழியே நாம் உணர்கிறோம்.
அடுத்து, மேற்கூறியபடி, நான் யார் என்னும் ஆன்மத் தேடலில் தொடங்கி முடிவில் அறியப்பட்ட தான் என்னும் ஆத்ம ஸ்வரூபமே இப்பிரபஞ்சத்தில் காணப்படும் எல்லா உயிர்களிலும் பொருள்களிலும், காலம் தேசம் போன்ற வரையறைகளுக்குள் இயங்குகிறது என்னும் உண்மையை விளக்குகிறார் ஸ்ரீ ரமணர்.
ஆத்மா என்பது பின்னம் என்னும் பிரிவோ சிதைவோ இல்லாத அபின்னமாக, அகண்டமாக விளங்கும் ஒரு பேருணர்வு (Supreme Consciousness or Awareness).
அதை, பொருள்களின் சொரூபத்தைத் தெரிய வைக்கும் விளக்குக்கு (ஜோதிக்கு) ஒப்பிடுவதுண்டு.
அதுவே எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் அவற்றின் சிற்றறிவினால் உண்டாகும் கட்டுபாடுகளுக்குள் அடங்கி ஒளிவிடுவது.
எனவே, பரிபூரணமான ஆத்மாவை அறிந்தவரின் உள்ளே ஆத்ம ஜோதியானது முழுமையாகப் ப்ரகாசிக்கும்.
தானே எல்லா உயிர்களுமாக,அவற்றிற்குள் இயங்கும் ஆற்றல் என்பதை உணர்ந்த படியால், எல்லா ஜீவராசிகளிடத்தும் அளவிட இயலாத அருள் (அல்லது, கருணை, இரக்கம், தயை, compassion என்று பலவாறாக விவரிக்கப்படும் உணர்வு) தனது இயல்பாக அமையும்.
அதனால் ஆத்மஞானி அருள் விலாஸமாக, அதாவது கருணையின் இருப்பிடமாக,ஆகிறான்.
அதே காரணத்தால், ஆத்மத் தேடலின் முதல் படியில் இருந்த நான் (அஹம்) என்னும் குறுகிய உணர்வு அவனிடத்தில் நாசமடையும் (அக விநாசமே). இத்தகைய ஞானத்தை அடைவது மிகச் சுலபமே என்று பகவான் மீண்டும் நினைவுறுத்துகிறார்.
முதல் சரணத்தில், நான் என்னும் உணர்வை உடல் என்னும் அன்னமய கோசத்தோடு சம்பந்தப்படுத்துவதை அழிப்பது பற்றிச் சொல்லி, இரண்டாவது சரணத்தில், அவ்வுணர்வைப் பிராண, மனோ கோசங்களின் பிடியிலிருந்து மீட்கும் வழியைக் கூறி இந்த மூன்றாவது சரணத்தில்,அவற்றையும் தாண்டி இயங்கும் விஞ்ஞானமய கோசத்திலிருந்தும் விடுவிப்பதன் அவசியத்தையும் அதனால் விளையும் பயனையும் கூறுகிறார்.

அடுத்துவரும் சரணங்களில், தான் என்னும் பேருணர்வைப் பெற ஆன்ம விசாரணை என்னும் சாதகத்தில் இறுதி கட்டம் வரை ஒட்டிக் கொண்டிருக்கும் அஹம் என்னும் குறுகிய வட்டத்திற்குள் இயங்கும் உணர்வைத் தாண்டி, தானே எல்லாமாக ஆகும் பேரின்ப நிலையை விளக்குகிறார் மகரிஷி ரமணர்.
சரணம் 4
பதவுரை
கன்மாதி கட்டு அவிழ: கர்ம வினைகளும் அதன் பயன்களும் நமக்கு விளைவித்த கட்டு என்னும் பந்தம் அவிழ்ந்து விடவும் (கன்மாதி= கன்ம ஆதி, கன்மம் முதலான)
சென்மாதி நட்டம் எழ: தொடந்து வரும்பிறவிகள் இனிமேல் இல்லாமல் போக (நட்டம் = நஷ்டம்; இல்லாமல் போதல்)
வெம் மார்க்கம் அதனினும் இம்மார்க்கம் மிக்கு எளிது: கடினமான சாதனை வழியை விட இந்த (ஆத்ம விசாரணை) என்னும் வழி மிகவும் சுலபமானது. (வெம் மார்க்கம்= கடினமான (பிற) வழிகள்)
சொல்மானத தனுவின் கன்மாதி சிறிது இன்றி: வாக்கு,மனம், உடல் ஆகியவற்றின் செயல்பாடுகள் சற்றும் இல்லாமல் (மானதம்= மனது; தனு = உடல்),
சும்மா அமர்ந்திருக்க:: சும்மா இருக்கும் நிலையில் இருந்தால்
அம்மா!அகத்தில் ஆன்ம ஜோதியே; என்ன அதிசயம்! ஆன்ம ஒளி நம்முள் தோன்றும்.
நித அனுபூதியே; இராது பீதியே; இன்ப அம்போதியே: அது எப்போதும் உள்ள அனுபவம் ஆகும்; பயமே இராது, பேரின்பக் காற்று வீசும். (இன்பு=இன்பம்;சுகம்; அம்போதி = காற்று; அல்லது அம்+போதிஎன்று பிரித்தால், சிறந்த அறிவு, ஞானம்)
பொருள் விளக்கம்
இந்த சரணத்தில் பகவான் ஸ்ரீ ரமணர் முந்தைய பகுதிகளில் கூறியவாறு உடல், மனம் இவற்றின் செயல்பாடுகளை அடக்கி உள்முகப் பயணம் செய்து, தான் எனப்படும் ஆத்ம உணர்வைப் பெறுவோமேயானால் நமக்குக் கிட்டும் பயனைப் பற்றி விளக்குகிறார்.
அந்தப் பேருணர்வு நிலையில் நான் என்னும் உடல், மனம் சம்பந்தப்பட்ட குறுகிய உணர்வு ஒரு துளியும் இல்லாததால் அவற்றின் செயல்பாடுகளால் விளையும் கர்ம பந்தங்களும் அவற்றின் விளைவான பிறப்பு-இறப்பு என்னும் தளைகளும் நம்மை விட்டுப் பூரணமாக விலகிவிடும்.
கன்மாதி கட்டுஎன்ற தொடருக்கு, ஸஞ்சித, ப்ராரப்த, ஆகாமி என்னும் மூவகைக் கர்மங்கள் விளைவிக்கும் பந்தங்கள் என்று பொருள் கொள்ளலாம்.
இவை நம்மைக் கட்டிப்போடுவதற்க்குக் காரணம் நம்மை அஹங்காரமே (அஹம்= நான்; அஹங்காரம்= நான் என்னும் உணர்வு).
அதுவே நம் சித்தத்தில், விருப்பு, வெறுப்பு என்னும் வாஸனைகளைப் படிய வைப்பது. அந்த வாஸனைகள் நமது தற்போதைய உடல் மாய்ந்த பின்னும் தொடர்ந்து அவற்றிற்கேற்ற வகையில் அமைந்த வேறொரு உடலில் குடிகொண்டு அடுத்த பிறவியையும் அதே வகையில் மேலும் பல பிறவிகளையும் தரும்.
இதையே சென்மாதிஎன்று பகவான் குறித்து இந்தப் பிறவித்தொடர் ஆத்ம ஞானம் வந்த க்ஷணத்திலேயே நஷ்டமடைந்து அதாவது தொலைந்து போய்விடும் என்று கூறுகிறார்.
நாம் மோக்ஷம் என்னும் முக்தி நிலையை அடைய, கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் என்று மூன்று வகையான வழிகளை ஸ்ரீ கிருஷண பகவான் கீதையில் குறிப்படுவார்.
இவை யாவுமே நமது அஹங்காரத்தை அழித்துப் கர்ம, பிறவித் தளைகளிலிருந்து விடுதலை பெற வைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டவை.அவற்றுள்,
கர்ம, பக்தி மார்க்கங்கள் ஞான மார்க்கத்தை விடப் பின்பற்றுவதற்கு எளிது என்னும் கருத்து மக்களிடையே பரவலாக இருந்து வருகிறது.
ஆனால், சிறு வயதிலேயே ஆத்ம ஞானத்தை அடைந்து நம்மிடை அண்மைக்காலம் வரை வாழ்ந்து தமது வாழ்க்கை முறையாலும் உபதேசங்களாலும் முக்தியடையும் வழியாக, ஆத்ம விசாரணை என்னும் ஞான மார்க்கத்தைப் போதித்த ரமண மஹர்ஷி இந்த வழி மற்ற இரு வழிகளை விட எளிதானது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்.
இது ஏன் என்று சற்று யோசித்தால் விளங்கும்.
கர்ம மார்க்கத்தைப் பயில யாக யக்ஞம் போன்ற கர்மங்கள்; யோக சாதனை போன்ற செயல்கள் மிகக் கடினமானவை, பலனும் உடனே கிட்டாது.
பக்தி மார்க்கத்தைப் பயிலவும் சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம், வந்தனம்,தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம் என்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டிவரும்.
இதற்கு நேர்மாறாக, ஆன்ம விசாரணைக்கோவெனில், நாம் வாக்காலோ, மனத்தாலோ, உடலாலோ ஒரு காரியமும் செய்ய வேண்டாம்.
மனத்தை எந்த நினைவிலும் பற்றுக் கொள்ள விடாமல் செய்து, அதன் சலனத்தை அழித்துச் சும்மா அமர்ந்திருந்தால்மட்டும் போதும் என்று பகவான் சற்று விளையாட்டாகக் கூறுவது போல ஓர் ஆழ்ந்த கருத்தைக் குறிப்பிடுகிறார்.
இப்படிச் சும்மா இருப்பதையே தாயுமானவர் சொல்லால் முழக்கிலோ சுகமிலை மௌனியாய்ச் சும்மா இருக்க அருள்வாய்என்றும் அருணகிரிநாதர் சும்மா இரு, சொல்லற என்றலுமே, அம்மா! பொருள் ஒன்றும் அறிந்திலனேஎன்றும் சிலாகித்துக் கூறுகின்றனர்.
இந்த நிலை அஹங்காரத் திரை விலகி ஆத்ம ஒளி வீசுவதை அனுபவித்திருக்கும் நிரந்தர அனுபூதி நிலை.
அதில் அறிபவன், அறியப்படுவது, அறிவு ஆகிய மூன்றும் ஒன்றே ஆவதால் வேறொன்றைப் பற்றிய கவலையோ அச்சமோ வர இடமில்லை.
பேரின்பம் என்னும் அமைதிக் காற்று வீசும் இடமாகத் திகழ்வது அந்நிலை.
இதுவே மோக்ஷம் அல்லது வீடு எனப்படும் யாவற்றிலிருந்தும் விடுபட்டு அதே சமயம் யாவுமாக இருக்கும் ஞான நிலை.
இந்த வீட்டுப் பேற்றை அடைவதே கர்ம, பக்தி மார்க்கங்களின் குறிக்கோளாகும். எனினும், பகவான் வேறொரு இடத்தில் கூறுவது போல, இந்த வழிகளில் பின்பற்றப்படுவன அகந்தையை வைத்துக்கொண்டே செயல்படும் சாதனைகள். இவ்வழிகளில் பல சந்தேகங்கள் எழும், முடிவில் யாரும், 'தான் யார்?' என்று பார்த்தே ஆகவேண்டும்.
ஆன்ம விசாரணையிலோ, முடிவிற் கேட்டுத் தெளியவேண்டிய 'நான் யார்?' என்னும் ஒரே கேள்வியே ஆரம்பம் முதல் கேட்கப்படுகிறது.
இவ்வழியைப் பின்பற்றுவோர்க்கு வேறெந்த ஊன்றுகோலோ துணையோ தேவையில்லை. ஆகவே, ஆத்ம வித்தை அதி சுலபம்
சரணம் 5
பதவுரை:
விண்ணாதிய விளக்கும் கண்ணாதிய பொறிக்கும் கண்ணா(ம்) மனக்க(ண்)ணுக்கும் கண்ணாய்:
மண், வானம் ஆகியவை கொண்ட வெளி உலகை நமக்குப் புலப்படுத்தும் கண் முதலான புறக் கருவிகளையும் நமக்குத் தெரியவைக்கும் நம் மனம் என்னும் கண்ணுக்கும் கண்போல இருக்கின்ற
மன வி(ண்)ணுக்கும் விண்ணாய் ஒரு பொருள்: மன வெளிக்கும் அப்பாற்பட்ட உள்ள ஒரு வெளியாய் இருப்பதாகவும்,
வேறு எண்ணாது இருந்தபடி: தானே எல்லாமாக இருப்பதால் வேறெதையும் எண்ணாமல்,
உள் நாடு உளத்து: உள்முகமாகத் தேடுகின்ற மனத்தில்
ஒளிரும் அண்ணாமலை - ப்ரகாசிக்கும் அண்ணாமலையாக இருக்கும் ஒளியை
என் ஆன்மா காணுமே: எனது ஆத்மாவானது அறியும்.
அருளும் வேணுமே; அன்பு பூணுமே; இன்பு தோணுமே: அந்நிலையை அடையும்போது மனத்தில் அருள் உணர்வும், அன்பும் உண்டாகும். அப்போது பேரின்பம் சித்திக்கும்.
பொருள் விளக்கம்:
இந்த இறுதிச் சரணத்தில், ஆத்ம ஞானமானது எல்லாவற்றையும் அறியவைக்கும் பேரறிவு என்பதைப் படிப்படியாக பகவான் ரமணர் விளக்குகிறார்.
நாம் பொருள்களைக் காண ஒளியின் உதவி தேவை. இங்கு, ஒளி என்று சொல்லப்படுவது எது நமக்கு அப்பொருளைத் தெரிய வைத்து அது பற்றிய அறிவைத் தருகிறதோ அதுவாகும்.
அதையே பொதுவாகக் கண் என்று இந்தச் சரணத்தில் குறிக்கிறார் ரமணர்.
புறக்கண், அகக்கண் என்ற இரண்டிற்கும் அப்பாலாய் நின்று அவற்றிற்குக் கண்ணாய் இருப்பது ஆத்மா என இந்தச் சரணத்தில் விளக்கி, அதை உணர்ந்த நிலையில் கிட்டும் அனுபவத்தைச் சொல்கிறார்.
முதலில், வெளியுலகக் காட்சிகளை,நிகழ்வுகளை நாம் அறிவதற்கு உதவுவது நமது கண், மூக்கு, காது, வாய், தோல் என்னும் ஐந்து கருவிகள் (ஐம்புலன்கள்) என்ற யாவருக்கும் தெரிந்த விஷயத்தைக் கூறிப் பிறகு, அப்புலன்களை இயக்குவது மனம் என்னும் கருவி என்று நினைவுறுத்துகிறார்.
உதாரணமாக, நாம் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது நம் விழித் திரையில் விழும் காட்சிகள் நம் உணர்வில் பதிவதில்லை, நாம் அவை பற்றி நினைப்பதில்லை, காரணம் நமது மனம் அக்காட்சிகளோடு தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாததுதான்.
ஆக, மனம் ந்தப் புனோடு தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறதோ அதன் வாயிலாக நாம் வெளியே நடப்பவற்றை அறிந்து கொள்கிறோம்.
அப்படியானால், மனத்திற்கும் பின்னால் இருந்து அதை இயக்குவது என்ன என்று கேட்டால் அதுவே ஆன்மா என்று பகவான் நமக்கு உணர்த்துகிறார்.
ஆக, நாம் வெவ்வேறு கரணங்களின் உதவியால் பெறும் அறிவு நமக்குள், நம்மையன்றியும் பிரபஞ்சத்திலுள்ள எதனின்றும் வேறாக இல்லாத ஆன்மாவின் ஒளியினால் தான் என்பதைத் தெளிய வைக்கிறார்.
எனவே, ’நான் யார்?’ என்ற கேள்வியுடன் உள் நோக்கிப் பிரயாணம் செய்து ஆத்மாவுடன் ஒன்றி அதுவே எல்லாமாக உணர்ந்து, அறிய வேண்டியது என்று தனியாக ஒன்றும் இல்லாமல் போய்த் தான்என்னும் பூரணப் பொருளாக இருக்கும் அந்த உணர்வில் தோயும் நிலையே அருள், அன்பு, இன்பம் இவற்றின் உண்மையான இருப்பிடமாக அமையும்.
பாடலின் இந்தக் கடைசிப் பகுதியில் தமக்கு இந்தப் பேருணர்வு வருவதற்குத் தூண்டுகோலாய் அமைந்த திருவண்ணாமலை இறைவனை பகவான் ஸ்ரீரமணர் நினைவு கூரும் வகையில், ஆத்மாவானது அண்ணாமலையாக உள்ளத்தில் ஒளிவீசும் என்கிறார்.
திருவண்ணாமலையில், சிவபெருமான் அடி முடி இல்லாத ஒளிவடிவாக நிற்பதால் ஆத்ம ஒளியும் அத்தகையது என்று கூறுவதாகக் கொள்ளலாம்.
அண்ணாமலை என்பதை அண் ஆம் மலை என்று பிரித்து, அண்மையில் இருக்கும் மலை என்று பொருள் கொண்டு, ஆன்மா என்பது மிக அருகில் நம்முள்ளேயே இருக்கும் பெரும் பொருள் என்றும் சொல்லலாம்.

இறுதியாக, பகவான் ஸ்ரீ ரமணரின் பல சீடர்களில் அவருக்கு மிகவும் நெருங்கியவரும் ஆத்ம விசாரணை சாதகம் செய்து ஞானநிலை எய்தியவருமான ஸ்ரீ முருகனார் தொடங்கி வைக்க, அவர்து வேண்டுகோளின்படி ஸ்ரீரமணர் மேலதிகமாகச் சரணங்களை இயற்றி முடித்து வைத்தது இந்தப் பாடலின் சிறப்புகளில் ஒன்று.
மேலும், பகவானுக்கு மிகப் பிடித்ததும் அவர் முருகனார், குஞ்சு சுவாமி, விசுவநாத சுவாமி, அண்ணாமலை சுவாமி, சின்ன சுவாமி, ராமசாமிப் பிள்ளை போன்றவர்களுடன் பலமுறை பாராயணம் செய்த ஆன்மிக நூல்களில் ஒன்றான ஸ்ரீ ரிபுகீதையில் விரிவாகக் கூறியிருக்கும் ஆத்ம சொரூபம், அதை உணரும் வழி ஆகியவற்றின் சாரத்தை மிக எளிய முறையில் அனைவரும் படிக்கவும் பாடவும் தகுந்த வடிவில் எடுத்துக் கூறியிருப்பது.
அது மட்டுமன்றி, வேறெந்த நூல்களிலோ, பிற உபதேச மொழிகளிலோ காணாத வகையில், ஸ்ரீரமணர் தமது ஆத்ம அனுபூதியின் அடிப்படையில், நாம் ஒவ்வொருவரும் நான் யார் என்ற விசாரணையில் தொடங்கி அதற்கான விடையை உள்முகமாக நம்மிடத்திலேயே தேடுதல் என்பது மிக சுலபமான செயல் என்று ஆணித்தரமாகவும், நம்மை ஊக்குவிக்கும் முறையிலும் இந்தப் பாடலில் மொழிந்திருப்பது அதன் தனிச்சிறப்பு.
.....அனந்தநாராயணன்




No comments:

Post a Comment