Wednesday, November 14, 2012

ஆன்ம வித்தை: பகுதி-2

ஆன்ம வித்தை
பகுதி-2
முந்தைய பகுதியைத் தொடர்ந்து, இனி இப்பாடலில்உள்ள பதங்களின் பொருளையும் அவற்றுள்ளடங்கிய ஆழ்ந்த கருத்துகளையும் விளக்கமாக அறிந்து கொள்ள முயல்வோம்.

அதற்கு முன், இப்பாடலின்பின்னணியைச் சற்றுப் பார்ப்போம்.

சங்கீத மேதையான கோபாலகிருஷ்ணபாரதியாரின் நந்தன் சரித்திரத்தில்,ஐயே மெத்தக் கடினம்என்று தொடங்கும் பாடல் ஒன்று உண்டு. சிவபெருமானையேசதா நினைந்து உருகி, சிதம்பரத்தில்அவனது பொன்னம்பல தரிசனத்தைக் காண ஏங்கி நின்ற, நந்தன் என்னும் பக்தன், ஐயன் பெருமையையும்தனது ஆற்றாமையை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்த பாடல் அது.

அதில் பரம்பொருளான சிவனை நம்முள்ளே காண்பதற்கு,

வாசியாலே மூலக்கனல் வீசியே கழன்றுவரப்
பூசைபண்ணிப் பணிந்திடு மாசறக் குண்டலியைவிட்(டு)
ஆட்டுமே மனமூட்டுமே மேலோட்டுமே வழிகாட்டுமே

என்றபடி,மூச்சையடக்கிக் குண்டலினி சக்தியை எழுப்பி, உச்சந்தலைப் பாகத்தில் உள்ள ஸஹஸ்ரார சக்கரம் என்னும் இடத்தில் நிறுத்துவது போன்ற கடினமான வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை நந்தன் உணர்ந்து கீழ்க்குலத்தில் பிறந்த தன்னால் அவ்வாறு செய்யலாகாது என்று புலம்புவான். மேலும்,

அட்டாங்கம் பண்ணினாலும் நெட்டாங்கு பண்ணியது
கிட்டாது கிட்டிவர வொட்டாது முட்டியது
பாயுமேமுனைதேயுமே அதுவோயுமே உள்ளே தோயுமேவேத

மந்திரத்தி லேபோட்டு யெந்திரத்திலே பார்க்குநீ
தந்திரத்தி லேயுமில்லை அந்தரத்திலே அவ
தானமேஅது தானமே பலவீனமே பேசாமோனமே

என்று இவ்வாறு சிவபெருமானின் உண்மை உருவத்தைக் கண்டுணர்வது எத்துணைச் சிரமமான காரியம் என்று விவரிப்பான்.

இத்தகைய அருஞ்செயலைத் தூய உள்ளமும், சிவனைக் காண வேண்டுமென்ற அளவுகடந்த ஆர்வமும் கொண்ட நந்தன், பக்தி செய்தல் என்னும் எளிய வழியை, பக்தி மார்க்கத்தைப் பின்பற்றி எவ்வாறு சாதித்தான் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி.

அதைப் போலவே, செய்யும் கர்மங்களின் பலனை எதிர்பாராமலும் நாம் செய்கிறோம் என்ற அகந்தை உணர்வு இல்லாமலும் நம் வாழ்க்கையை நடத்தி அதன் வழியே வெளியில் தோன்றும் எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாக இருக்கும் பரதத்துவத்தை அறிவது கர்ம மார்க்கம் என்னும் ஆன்மிக வழியாகிறது.

நன்றாகப் பார்த்தால், பக்தி, கர்மம் என்ற இவ்விரண்டு மார்க்கங்களும் இறுதியில் நமக்குத் தெளியவைப்பது நான் என்று ஒவ்வொருவரிடமும் இருக்கும் உணர்வு நம் உடல், மனம், புத்தி போன்ற யாவற்றையும் கடந்து நமது உண்மை அல்லது இயல்பான சொரூபமான ஆத்மாவைப் பற்றிய அறிவையே ஆகும்.

இந்த அறிவை நம் வாழ்நாளிலேயே எளிதாக அடையப் பகவான் ஸ்ரீரமணர் தாமே ஒரு எடுத்துக்காட்டாக நின்று நமக்குக் காட்டிய வழி ஆன்ம விசாரணை அல்லது ஆத்ம வித்தை என்னும் வழியாகும். இதுவே ஞான மார்க்கம் என்று உபநிஷத்துக்களிலும் கீதையிலும் கூறப்படும் வழியாகும்.

ஞான மார்க்கத்தில் தீவிரப் பற்றுக் கொண்டு, மனத்தை உள்நோக்கிச் செலுத்துவோர்க்குப் பரமாத்ம தத்துவத்தை, அதாவது நாமே பிரம்மம் என்ற உண்மையை அறிவதுமிக எளிதான காரியம் என்பதை,

ஐயே,அதிசுலபம்- ஆன்ம வித்தை
ஐயே,அதிசுலபம்’’

என்ற பல்லவியைக் கொண்ட பாடல் வழியாகப் பகவான் ஸ்ரீரமணரின் சீடராகப் பணியாற்றிய முருகனார் என்பவர் கூற நினைத்து, அப்பாடலின் அனுபல்லவியையும் எழுதினார். எனினும்,அதைத் தொடர்ந்து பாடலின் சரணம் பகுதியை எழுதத் தம்மால் இயலவில்லை என்று முருகனார் அதற்குப் பகவானின் துணையை நாடினார். அதற்கிணங்கி, ரமணர் ஐந்து சரணங்களை இயற்றி(மேலே தந்துள்ளவாறு) பாடலைப் பூர்த்தி செய்தார். இந்தப் பாடலின் பொருளை இப்போது ஆராய்வோம்.

பல்லவியில், ஆத்ம (ஆன்ம) ஞானம் அடைவது மிகவும் எளிது என்று கூறுவதன் பொருள், ஞான மார்க்கத்தைப் பின்பற்றி ஆத்ம விசாரம் - ஆத்மத் தேடல் -செய்யும் வித்யை அல்லது கலை, பரம்பொருள் பற்றிய அறிவை நாம் பெற மற்ற வழிமுறைகளை விடச் சுலபமானது என்பதே.

இவ்வழியைப் பின்பற்றி மெய்யறிவு பெற முயல்பவரை மட்டுமன்றி, இது கடினமான வழி என்ற எண்ணம் கொண்டவரையும் கூடத் திசைதிருப்பி ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது இப்பாடலின் பல்லவி

இனி வரும் பகுதிகளுக்கு, முதலில் அவற்றின் பதவுரையைப் பார்த்துப் பின்னர் அவற்றிற்கான பொருள் விளக்கத்தைக் காண்போம்.

பதவுரை:

நொய்யார் தமக்கும் -- மனத் திண்மை இல்லாதவர்களுக்கும்; அதாவது, ஆத்ம ஞானம் என்னும் முழுமையானதிடமான மனப் பாங்கு இல்லாமல் இருப்பவர்களுக்கும்; நொய் என்பது நுண்மை, எளிதில் உடைதல், இலேசாக இருத்தல், சிறியது போன்ற தன்மைகளைக்குறிக்கும் சொல்.

உள்ளங்கை ஆமலகக் கனிபொய்யாய் ஒழிய - உள்ளங்கை நெல்லிக்கனிஎன்ற உபமானம் பொய்யாகும்படி

மிகு மெய்யாய் உளதுஆன்மா - மிகவும் உண்மையான ஒன்றாக ஆத்மா உள்ளது.

பொருள்விளக்கம்:

இந்த அனுபல்லவியில்,பல்லவியில் அறைகூவும் வகையில் கூறியதை மேலும் விளக்கும் வண்ணம், தன்னை அறிதல் என்னும் பயிற்சியின் இறுதியில் நாம் அடையவிருக்கும் நம்முடைய உண்மை சொருபமான ஆத்மா மிகச் சாதாரண மனிதர்களுக்கும் கண்கூடாகத் தெரியும் ஒன்று என்பதை அழகுபடக் கூறுகிறார்.

ஆத்ம ஞானம் என்னும் முழுமையானதிடமான மனப் பாங்கு இல்லாமல் இருப்பவர்களை நொய்யார் என்னும் பதத்தால் குறிக்கிறார்.

நொய் என்பது நுண்மை, எளிதில் உடைதல், இலேசாக இருத்தல்,சிறியது போன்ற தன்மைகளைக்குறிக்கும் சொல்.

(நொய்யார் என்பது தற்போது அதிகமாகப்புழக்கத்தில் இல்லாத ஒரு சொல். நல்வழி நின்றார் பகைநன்று நொய்யர் உறவில்..”என்று பதினொன்றாம் திருமுறையில், சிறியோர் நொய்யர் எனக் குறிக்கப்படுவர்.)

ஹஸ்தாமலகம்என்று ஸம்ஸ்க்ருதத்திலும் உள்ளங்கை நெல்லிக்கனி என்று தமிழிலும் புழங்கும் சொல் தர்க்க ஸாஸ்த்ரத்தில், நிதர்சனமாகத்தெரியும் ஒன்றைக் குறிக்கச் சொல்லும் உபமானம்.

இங்கு, அதனினும் நிதர்சனமாய்ஆத்மா உள்ளது என்பார்.

அதாவது,அந்த உவமையில், உள்ளங்கை வேறு நெல்லிக்கனிவேறு பார்ப்பவன் வேறு பார்க்கப்படுவது வேறு என்று வித்யாசம் உள்ளது.

அவ்வாறு இல்லாமல், ஆத்மாவானதுஅது விளங்கும் வடிவங்களிருந்து விலகி நிற்கும் தனிப்பட்ட ஒன்றல்ல. அதனால் எங்கும் போய்த் தேடவேண்டியதேவை இல்லை.

அதனால் தான் அந்த உபமானம் பொய்யாகப்போகும்படி, அதாவது, அதையும் விட எளிதாய் என்றார். எனவே நம்முள்ளேயேஇருப்பதை அறிவதான ஆன்ம வித்தை மிக எளிது.

ஐயே!ஆன்ம வித்தை அதிசுலபம்!

இனி, பாடலின் முதல் சரணத்திற்கு வருவோம்.

சரணம்1

பதவுரை:

மெய்யாய் நிரந்தரம் தான்:எப்போதும் நிலைத்திருக்கும் உண்மைப் பொருளாகத்தான்என்னும் ஆத்மா சொரூபம்

ஐயாது இருந்திடவும்: ஒருவகைச் சந்தேகத்திற்கும் இடமின்றி இருக்கும் போது

பொய்யாம் உடம்பு உலகம்மெய்யாய்: உடல் பிரபஞ்சம்(ஜீவன், ஜகத்) என்னும் பொய்யானவற்றைஉண்மை என்று

முளைத்தெழும் பொய்ம்மைஆர் நினைவு: உள்ளத்தில்முளைத்து ஓங்குகின்ற பொய்ம்மை ஆன நினைவை

அணுவும் உய்யாது ஒடுக்கிடவே:: துளியேனும் வளரவிடாமல் அழிந்திடுமாறு செய்தால் ; அதாவது அஞ்ஞானத்தைஅடியோடு ஒழித்தால்

மெய்ஆர் இதயவெளி: உண்மை உறையும் நம் இதய ஆகாசத்தில்

வெய்யோன் சுயம் ஆன்மாவிளங்குமே: நமது இயற்கையானஆன்ம சொரூபம் சூரியனைப் போல ஒளிவிடும்.

இருள்அடங்குமே; இடர் ஒடுங்குமே இன்பம் பொங்குமே: அஞ்ஞான இருள் விலகும், துன்பம் அழியும், பேரானந்தம்பொங்கி எழும்.

பொருள் விளக்கம்:

உண்மை என்னும் சொல்லுக்கு உள்ள தன்மை என்று பொருள் (உள்+மை=உண்மை).

அந்த வகையில், எப்போதும்,எங்கும் உள்ள, அதாவது நிரந்தரத்தன்மை கொண்ட ஆத்ம ஸ்வரூபமே உண்மையாகும்.

நம் கண்ணெதிரேதோன்றும் பிரபஞ்சம், நமது உடல் போன்ற அனைத்தும்பொய்ம்மைத் தன்மை கொண்ட தோற்றங்களே.

ஏனெனில், இவை காலம் தேசம், நிகழ்வுகள்(வர்த்தமானம்)ஆகியவற்றுக்கு உட்பட்டுக் கணம்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை.

எனினும், அனுபல்லவில்கூறியது போல, அவற்றினுள்ளேதான் என்னும் உணர்வாக உண்மையான ஆத்மாவானது இயங்கிக் கொண்டிருக்கிறது.இதில் யாதொரு சந்தேகத்திற்கும் இடமில்லை.

ஸ்ரீ ரமணர் போன்ற ஆத்ம ஞானிகள் தமது வாழ்க்கையாலும் வாக்காலும் இதை நிரூபித்துள்ளனர்.

இப்படி ஆத்மா நம்முள் இயங்குவதைநாம் உணர இயலாமல் செய்வது வெளி விஷயங்களில் ஈடுபட்டு அதன் விளைவாக நம்முள், இந்தப் பொய்யான உடம்பே உண்மை என்ற நினைப்பே. நம் மனத்துள் எழும் இந்த நினைப்பை அணுவளவும்இராமல் ஒழித்து விட்டால் என்னாகும் என்பதை இந்தச் சரணத்தின் கடைசி அடிகள் விவரிக்கின்றன.

வானத்தில்இருண்ட மேகங்களால் மறைக்கப்பட்டிருந்த சூரியன் அவை முற்றிலும் விலகி அழிந்துபோன பின் எவ்வாறு தன் சுயமான பூரண ஒளியோடு பிரகாசிக்குமோ, அவ்வாறு நமது இதயமாகிய வான வெளியில், பொய்யான நினைவு அல்லது அஞ்ஞானம் என்னும் இருண்ட முகில்கள்மறைந்து அங்கே நமது உண்மை சொரூபமான ஆத்மா பிரகாசிக்கும் என்று இந்தச் சரணத்தில் மிக அழகாகக் கூறுகிறார்.

இவ்வண்ணம் நம்முள் ஏற்கனவே ஒளிவீசிக் கொண்டிருக்கும் ஆத்ம ஜோதியை நாம் அறிந்து அதுவாகவே ஆகிப் பரமானந்த நிலை அடைய நாம் செய்ய வேண்டியதெல்லாம்,இந்த உடலே உண்மையானது என்ற பொய்யான கருத்தைத் தாங்கி நிற்கும் நம் நினைவை அகற்ற வேண்டிய ஒரு செயல் ஒன்றுதான் என்பதால் ஆன்ம வித்தை- ஆத்ம சொரூபத்தைஅறியும் முறை மிக எளிது என்றார் பகவான் ரமணர்.

சரணம் 2:

பதவுரை-

ஊன்ஆர் உடல் இதுவேநான் ஆம் எனு(ம்)நினைவே: மாமிசப் பிண்டமான உடலை நான்என்று கருதும் எண்ணம்

நானா நினைவுகள் சேர்ஓர் நார்: நம் மனத்தில் எழும் நினைவுகளால்(தற்போதைய, முந்திய, வருங்கால எண்ணங்களால்)ஆன மாலையொன்றைக் கோக்க அவற்றின் ஊடே செல்லும் நார் போன்றது

எனும்அதனால்: என்பதனால்

நான்ஆர்?இடம் எது?என்று உள்போனால்: உண்மையான நான் என்பது யார் அது இருக்கும்இடம் எது என்று தேடிக்கொண்டு உள் முகமாகப் பயணம் செய்தால்

நினைவுகள் போய்: முன்பு சொன்ன நினைவுகள்யாவும் அழிந்து

நான், நான்எனக் குகையுள் தானாய்த் திகழும் ஆன்மஞானமே: நம் இதயக் குகையுள் இதுவே நான், இதுவே நான் என்று தான்என்ற பூரண வடிமான ஆத்ம ஞானம் விளங்கும். அந்த நிலை

இதுவேமோனமே; ஏக வானமே;இன்பத்தானமே: இந்த நிலையேமேற்கொண்டு தேடுதலோ அறிதலோ இல்லாத மௌன நிலையாம்; தான் ஒன்று மட்டுமாக (ஏகமாக) அது வீற்றிருக்கும் இடம் ஞானவெளி அல்லது ஞானாகாசம். அதுவே பேரானந்தத்தின் இருப்பிடம். (தானம்=ஸ்தானம், இங்கு இன்பம் உறையும் இடம்).

பொருள் விளக்கம்

நமக்குள், நமது இயல்பான ஆனந்த வடிவாய் ஒளிவீசிக்கொண்டிருக்கும் ஆன்மாவானது, ஜீவராசிகளுக்குள், குறிப்பாக மனிதருக்குள், மாயையின் விளைவால் ஏற்பட்ட ஐந்து கோசங்களால்(போர்வைகளால்) சூழப்பட்டிருக்கிறது.

அன்ன, ப்ராண, மனோ, விஞ்ஞான, ஆனந்த மய கோசங்கள் என்னும் இந்த ஐந்து மறைப்புகளையும் விலக்கினால்தான் ஆன்மாவின் பூரண ஒளி நமக்குப் புலப்படும், அதாவது ஆத்ம ஞானம் கிட்டும்.

முதல் சரணத்தில்,பகவான் ஐந்து பூதங்களினால் ஆக்கப்பட்ட நம் உடலாகிய முதல் கோசத்தைப் பொய்யானது என்று குறிப்பிட்டார்.

இந்தச் சரணத்தில்அந்த உடல் வெறும் மாமிசப் பிண்டமே ஆகும். அதை நான்என்று நினைத்து அதைப் பேணுவதிலேயே வாழ்நாளைக் கழிப்பதன் அர்த்தமில்லாமையை மீண்டும் சுட்டி அந்த நினைவு நமக்கு எப்படி உண்டாயிற்று என்று ஆராயத் தூண்டுகிறார்.

பொய்யான உடலை மெய்யென்றுநாம் நினைப்பது மனத்தின் செயலால் விளைந்த ஒன்று.

இந்தத் தவறான நினைப்பை ஒழிக்க, நினைவுகளின்இருப்பிடமான நம் மனத்தின் (அல்லது மனோமய கோசத்தின்)அமைப்பைப் புரிந்து கொள்ளவேண்டும்.

பாடலின் இந்த சரணத்தில்,மனம் என்பதை நினைவுகள் யாவையும் கோக்கும் ஒரு நார், அல்லது கயிறு என்று உருவகப் படுத்துகிறார்ஸ்ரீரமணர். நி

கழ்கால நடப்புகளினால் விளையும் நினைவுகள் மட்டுமன்றிக் கடந்த கால, எதிர்கால நினைவுகளின்தொகுப்பே நம் மனம்.

(நம் மனத்தில் ஒருநாளையப்பொழுதுக்குள் ஆயிரக்கணக்கான (சுமார்12000-65000 நினைவுகள்எழுவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்http://www.sentientdevelopments.com/2007/03/managing-your-50000-daily-thoughts.html).

இந்நினைவுகள்ஒன்றன்பின் ஒன்றாக- ஒரு கயிற்றில்அடுத்தடுத்துக் கோக்கப்பட மணிகள் போல-கனவிலும் கூட நம்மை விடாது மனத்தில் எழும்பிக்கொண்டே இருக்கும்.

இதை மேலும் ஆராய்ந்தோமேயானல்,ஒரு குறித்த காலத்தில் ஒரு நினைவு அல்லது எண்ணம் தோன்றி, ஒரு கால அளவு வரை இருந்து,பின் அழிகிறது என்பதைக் காண்போம்.

அதை அடுத்து உடனேயே இன்னொரு நினைவு அதேபோல எழும்பி,நின்று, அழிகிறது.

எழுகின்ற ஒரு நினைவு கூட ஏன் எப்போதுமாகநிலைத்து நிற்காமல் மறைகின்றது என்பதற்கான காரணத்தை ஆராய்ந்தால், ஆயிரக்கணக்கில் எழும் நினைவுகளில் ஒன்று கூட நமக்கு முழுமையான திருப்தியை, இன்பத்தை, நிறைவைக் கொடுக்காமல்போனது தான் என்பது தெரியும்.

இதற்குக் காரணம் நமது எல்லா நினைவுகளும் இடம், காலம், சந்தர்ப்பம் இவற்றின் தாக்குதலால் மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்ட வெளியுலக விஷயங்களினால் விளைந்தவைகள் என்பதே.

அதனால் அவை நிரந்தர அல்லது முழுமைத் தன்மையற்றனவாகவே இருக்கும்.

ஆக, மனம் நினைவுகளைத்தாங்கி நிற்கும் கயிறு. நினைவுகளோ சாச்வதமற்ற வெளியுலக நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்தவை என்பதைப் பாடலின் இந்த இடத்தில் தெரிந்து கொள்கிறோம்.

அடுத்தபடியாக,பகவான் நம்முள் எழும் நினைவுகளையும் அவற்றின் தொகுப்பான மனத்தையும் நாம் அழிக்க இயலும் என்று நம்மை ஊக்குவிக்கும் வழியைச் சொல்லித் தருகிறார்.

நான் யார்? என்ற ஆராய்ச்சிதான் அந்த வழி. அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

நான் என்பது நாம் ஒவ்வொருவரும் சதா சர்வகாலமும் நமக்கெனக் கொண்டிருக்கும் ஒரு தனி அடையாளம். அது மிக ஆழமாக நம்முள் உறையும் ஒரு உள்ளுணர்வு.

இந்த உணர்வு உடல், மனம் இரண்டையும் தாண்டி நிற்கும் ஒன்று.

ஏனெனில், உடல் உணர்வற்றுஇருக்கும் உறக்க நிலையிலும் அது இயங்கிக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். கனவு காணும் உறக்க நிலையில்(ஸ்வப்ன நிலையில்) மட்டுமன்றி,ஒரு கனவும் இல்லாத ஆழ்ந்த தூக்க நிலையிலும் (ஸுஷுப்தி நிலையிலும்)இந்த நான் உணர்வு தொடர்ந்து இருப்பதால், அந்நிலைகளிலிருந்து விழித்தெழுந்த பின், நான்நன்றாகத் தூங்கினேன் என்று ஒரு மனிதரால் சொல்ல முடிகிறது.

மேலும், காலப் போக்கிற்கேற்ப உடல் மாற்றங்களை அடையும் போதும், நம்முள் நான்என்ற உணர்வு மாறாமல் தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு சதா சர்வகாலமும்நாம் நமக்கே ஆன அடையாளமாகக் கொண்டிருக்கும் இந்த நான்என்பது உண்மையில் யார்? அது இருக்கும்இடம் எது என்று மேலும் ஆராய நாம் உள்முகமாக நம் உணர்வைச் செலுத்த வேண்டும்.

அப்படிச் செய்யும்போது,நாம் நம் உடல், மனம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டைத் (அன்ன, மனோமய கோசங்களைத்) தாண்டி நமக்குள் இருக்கும் ஒரு இடத்தை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்குவோம்.

அப்பயணத்தின்விளைவாக, நினைவுகள் எல்லாம் அழியத் தொடங்கி அவற்றினால் ஆன மனமும் அழிந்த நிலை ஏற்படும்.

அப்போது, நமது இதயக் குகைக்குள்,உண்மையான  நான்’’, அதாவது ஆத்மாவின் உண்மை வடிவம் தெளிவாகப் புலப்படும். இதை, 'நான், நான் எனக் குகையுள் தானாய்த் திகழும்என்ற அடியில் பகவான் குறிக்கிறார்.

இதன் வழியாக ஒரு ஆழமான கருத்தை அவர் நமக்கு எளிதில் புகட்டுகிறார்.

ஒருவரை நாம் தேடிகொண்டிருக்கும் போது, அவர் நான் இங்கு இருக்கிறேன், இதோ இங்கே இருக்கிறேன் என்று தாம் இருக்குமிடத்தை அடையாளம் காட்டுவதைப் போல, நம்முள் நிரந்தரமாக வசிக்கும் தான் என்னும் பேருணர்வு தன்னை நாம் தேடிக்கொண்டிருக்கும் நான்என்ற வஸ்துவாகக் காட்டிக்கொடுக்கிறது.

குறிப்புதத் த்வம் அஸி என்னும் மஹாவாக்கியத்தில் காணும் தத்என்னும் பரம்பொருளாகிய பேருணர்வைத் தான்என்றும் த்வம் என்பது ஜீவன் தன் உண்மை உருவத்தை அறியாமையினால் சொல்லிக் கொள்ளும் நான்என்றும் இங்குக் குறிப்பிடுவதாகக் கருதலாம்.

அதன்படி, மனிதனின் நான் யார்என்ற தேடலின் இறுதியில் அவன் உள்ளே இருக்கும் தான்என்னும் பேருணர்வு, நீ தேடும் நான் இதோ உன்னுள் எப்போதும்இருக்கிறேன் என்று காட்டித் தருவதாகக் கொள்ளலாம்.

இந்தச் சரணத்தின்நான்காவது அடியில், நான், நான் என்று இரண்டு முறை வரும் இடத்தில், முதலில் வரும்நான் ஆன்மத் தேடலை தொடங்கிய போது நாம் கொண்டிருந்த உடல், மனம் இவையோடு சம்பந்தப்பட்டநான்என்ற உணர்வையும், பின்வரும்நான் நமது உண்மையான ஆத்ம சொரூபத்தையும் சுட்டுவதாகப் பொருள் கொள்ளலாம்.

இந்த இரண்டாவதுநான் என்பதைத் தான்என்ற சொல்லால் குறிப்பது வழக்கம்.

இந்தப் பேருணர்வைஞானிகள் குகை என்று உவமிப்பதன் காரணம் அது குஹ்யமானது, அதாவது மறைந்து உறைவது என்பதைச் சுட்டுவதற்கே.

அப்படி உறையும் இடத்தை ஆன்மிக சாதகர்கள் சங்கேதமாக இதயக்குகை, இதயவெளி என்று குறிப்பிடுவதுஉண்டு.

இங்கே, மறைந்து என்பது மனம், புத்தி ஆகியவற்றால்அறிய இயலாதபடி அவற்றிற்கு அப்பாலிருக்கும் ஒன்றைக் குறிக்கும் சொல்.

(ஸுப்ரஹ்மண்யஸ்வாமியைக் குஹன் என்று சொல்வது அவர் சுத்த ப்ரஹ்ம ஸ்வரூபமாக(ஸு ப்ரஹ்மண்யம் ஆக) புலன்களாலும்மனத்திற்கும் எட்டாத தத்துவமாய் இருப்பதைக் குறிப்பதற்குத்தான். இதை நிராகாரம் நிராதாரம் நிர்விகாரம் நிராமயம், நிர்த்வந்தம்நிராலம்பம் வந்தே குஹம் உமாஸுதம் என்று குஹ பஞ்சரத்னத்தில் சங்கர பகவத்பாதர் விளக்குவார்).

இவ்வாறு, மேற்கொண்டுவெளி விஷயங்களில் ஈடுபட்டு அவற்றினால் உண்டாகும் நினைவுகளைச் சேமிக்கும் செயல் இல்லாமல் போய், மோன நிலை என்னும் நிலையை எட்டுவோம்.

இதையே ஆசா நிகளம் துகளாகிய பின் பேசா அனுபூதி பிறந்ததுவே என்பார் அருணகிரிநாதர்;

ஆசா நிகளம் என்பது ஆசை அல்லது உலகப் பற்று என்னும் சங்கிலி என்று பொருள்படும்.இந்த அனுபூதி நிலையில் ஐந்து கோசங்களின் கட்டும் விலகி ஆன்ம ஒளி பூரணப் ப்ரகாசத்துடன் ஒளிரும்.

அது தானே எல்லாமுமாகி, இடம், பொருள், காலம் யாவற்றையும்கடந்த ஒன்றான நிலை

ஆதலால் அது ஒருவகை மாற்றமும் இல்லா இன்பம், நிரந்தர ஆனந்தம், வசிக்கும்இடமாகும் என்பதை இந்த இரண்டாவது சரணத்தின் இறுதியில் ரமணர் குறிப்பிடுகின்றார்.


தொடர்ந்து பகுதி  3  -ல்.. .. .....

No comments:

Post a Comment